திட்டள்ளி ஆதிவாசி மக்களுக்கு 15 நாட்களில் வீடுகள் கட்ட இடம் ஒதுக்கப்படும் காகோடு திம்மப்பா தகவல்


திட்டள்ளி ஆதிவாசி மக்களுக்கு 15 நாட்களில் வீடுகள் கட்ட இடம் ஒதுக்கப்படும் காகோடு திம்மப்பா தகவல்
x
தினத்தந்தி 16 April 2017 2:30 AM IST (Updated: 16 April 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

திட்டள்ளி ஆதிவாசி மக்களுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் வீடுகள் கட்ட அரசு சார்பில் இடம் ஒதுக்கப்படும் என்று மந்திரி காகோடு திம்மப்பா கூறினார்.

குடகு,

திட்டள்ளி ஆதிவாசி மக்களுக்கு இன்னும் 15 நாட்களுக்குள் வீடுகள் கட்ட அரசு சார்பில் இடம் ஒதுக்கப்படும் என்று மந்திரி காகோடு திம்மப்பா கூறினார்.

ஆதிவாசி மக்கள் போராட்டம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா திட்டள்ளி பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள், வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதாகக் கூறி 575 வீடுகளை வனத்துறையினர் இடித்து அகற்றினர். இதைக் கண்டித்தும், மாற்று இடம் வழங்கக்கோரியும் அங்குள்ள ஆதிவாசி மக்கள் போராடி வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் ஆதிவாசி மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து ஆதிவாசி மக்கள் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து அறிந்த முதல்–மந்திரி சித்தராமையா போராட்ட குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மந்திரி ஆய்வு

அப்போது ஆதிவாசி மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்ய வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து திட்டள்ளி பகுதியில் மந்திரி காகோடு திம்மப்பா நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது ஆதிவாசி மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அந்த பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திட்டள்ளி ஆதிவாசி மக்களுக்கு இந்த பகுதியிலேயே வீடுகள் கட்ட இடம் ஒதுக்கப்படும். அதற்காக இங்குள்ள அரசு நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளேன். அதுகுறித்த தகவல் கிடைத்ததும் முதல்–மந்திரி சித்தராமையாவிடம் அறிக்கை அளிக்கப்படும்.

15 நாட்களில்...

இன்னும் 15 நாட்களில் பாதிக்கப்பட்ட திட்டள்ளி ஆதிவாசி மக்களுக்கு அரசு சார்பில் நிலம் கண்டிப்பாக ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு பணியின் போது மந்திரியுடன், கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.


Next Story