கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றமா? முதல்–மந்திரி சித்தராமையா பதில்


கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றமா? முதல்–மந்திரி சித்தராமையா பதில்
x
தினத்தந்தி 16 April 2017 2:00 AM IST (Updated: 16 April 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றமா? என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றமா? என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளார்.

ராகுல்காந்தியுடன் சந்திப்பு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு மற்றும் குண்டலுபேட்டை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேச முதல்–மந்திரி சித்தராமையா டெல்லி சென்றுள்ளார்.

டெல்லியில் நேற்று காலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்ததும் வெளியே வந்த முதல்–மந்திரி சித்தராமையாவிடம், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பரமேஸ்வர் மாற்றப்படுவாரா? என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

கட்சி மேலிடம் முடிவு செய்யும்

மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச டெல்லி வந்துள்ளேன். மந்திரிசபையில் 2 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவது குறித்து ராகுல்காந்தியுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. கர்நாடக மேல்–சபையில் காலியாக உள்ள 3 நியமன உறுப்பினர்களை நியமிப்பது குறித்து ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். நியமன உறுப்பினர்களை நியமிக்க 6 பேர் அடங்கிய பட்டியலை அவரிடம் கொடுத்துள்ளேன். அதற்கான ஒப்புதலை விரைவில் அளிக்கும்படி ராகுல்காந்தியிடம் கேட்டுக் கொண்டேன்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரை மாற்றுவது தொடர்பாகவும், புதிய தலைவரை நியமிப்பது குறித்தும் ராகுல்காந்தியுடன் ஆலோசிக்கவில்லை. மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.


Next Story