டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேர் கைது
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண் டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக கோவையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே கோவை ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
20 பேர் கைதுஇந்த நிலையில் நேற்று காலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் மாணவர்கள் கோவை ரெயில் நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகள் போன்று உடை அணிந்தபடியும், இறந்தவர் போன்று நடித்த ஒருவரை தூக்கியவாறு வந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்த னர். இதில் 3 மாணவிகள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் தீபிகா, துணைத்தலைவர் ஸ்டாலின், துணைச்செயலாளர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
தொடர் போராட்டம்டெல்லியில் விவசாயிகள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு, பிரதமர் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பார்க்க நேரம் இல்லை.
வாழ்வுரிமைக்காக போராடி வரும் விவசாயிகளை பா.ஜனதா தலைவர்கள் ஏளனமாக பேசி வருவது கண்டனத்துக்குரியது. விவசாயிகளை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டமும், விவசாயிகளை போன்று நிர்வாண போராட்டமும் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.