பீளமேடு மேம்பால பணிகள் தாமதமாவதை கண்டித்து 1000 வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
பீளமேடு ரெயில்வே மேம்பால பணிகள் தாமதமாவதை கண்டித்து 1000 வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.
கோவை
கோவை பீளமேடு பகுதியில் ரெயில்வேதுறை சார்பில் மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீளமேடு முருகன்நகர், ஹட்கோகாலனி வழியாக கனரக வாகனங்கள் மூலம் தளவாட பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி வைந்தனர். மேலும் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையையும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பீளமேடு முருகன்நகர், ஹட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில் 1000 வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால் கூறியதாவது:–
விபத்து அபாயம்பீளமேட்டில் ரூ.31 கோடி செலவில் கடந்த 1½ ஆண்டாக ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. பீளமேடு ரெயில்நிலையத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவையான இரும்பு பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கனரக லாரிகள் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் தெருக்கள் வழியாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் அந்த ரோடுகளும் சேதமடைந்து வருகின்றன.
எனவே இருகூர் ரெயில்நிலையத்தில் இரும்பு தளவாட பொருட்களை இறக்கி வைத்து அங்கிருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கலாம். ரெயில்வே மேம்பாலம் அருகே 16 அடி அகலத்திலும், 7 அடி உயரத்திலும் துணை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பணியும் நடைபெறவில்லை. ரெயில்வேதுறையும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 1000 வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம். அடுத்த கட்டமாக பெரிய போராட்டம் நடத்துவோம்.