ராயப்பேட்டை மருத்துவமனையில் இயங்கி வந்த சிறை கைதிகள் வார்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றம்


ராயப்பேட்டை மருத்துவமனையில் இயங்கி வந்த சிறை கைதிகள் வார்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 16 April 2017 2:30 AM IST (Updated: 16 April 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த சிறை கைதிகள் ‘சிறப்பு வார்டு’ கைதிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1837–ம் ஆண்டு சென்டிரல் மத்திய சிறை சாலை கட்டப்பட்டது. 172 ஆண்டுகள் பழமையான இந்த சிறை சாலை பழுது அடைந்த காரணத்தால் கைதிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 2006–ம் ஆண்டு முதல் சென்னை புழல் பகுதியில் அனைத்து வசதிகளுடன் புதியதாக சிறை சாலை கட்டப்பட்டு கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர்.

 மத்திய சிறை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே இருக்கும் போது கைதிகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது மத்திய சிறை புழல் பகுதிக்கு மாற்றி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் கைதிகள் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கே கொண்டு செல்லும் நிலையே தொடருகிறது.

கைதிகள் வார்டு மாற்றம்

கைதிகளை மேல் சிகிச்சைக்கு கொண்டு வரும் போது பயண தூரம் அதிகமாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் சில கைதிகள் இறக்க நேரிடுகிறது என்று சிறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டது. இதனால் ராயப்பேட்டையில் இருக்கும் கைதிகள் சிறப்பு வார்டை புழல் சிறைக்கு அருகில் இருக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ராயப்பேட்டையில் இயங்கி வந்த கைதிகள் சிறப்பு வார்டு, நவீன வசதிகளுடன் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த வார்டில் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போலீசார்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பார்கள்.

Next Story