திருப்பூரில் குடிநீர் வசதி கேட்டு குழந்தைகளுடன் பெண்கள் சாலைமறியல்
திருப்பூரில் குடிநீர் வசதி கேட்டு குழந்தைகளுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 43–வது வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுடன் காங்கேயம் ரோடு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நேற்றுகாலை 9 மணி அளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் காங்கேயம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பெண்கள் கூறும்போது, பெரியதோட்டம் மெயின் வீதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அதுபோல் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மோட்டார் மூலம் சப்பை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் மின்மோட்டார் பழுதானதால் மோட்டாரை மாநகராட்சி அதிகாரிகள் கழற்றி சென்று விட்டார்கள். இதுவரை மோட்டார் பொருத்தாததால் சப்பை தண்ணீர் எங்களுக்கு கிடைக்கவில்லை. கைப்பம்பிலும் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக வீட்டு உபயோகத்துக்கு சப்பை தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்றனர்.
போக்குவரத்து பாதிப்புமாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வினியோகம் செய்வதற்கும், லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ¾ மணி நேரம் திருப்பூர்– காங்கேயம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.