டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 April 2017 3:45 AM IST (Updated: 16 April 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

சென்னை,

தமிழக விவசாயிகள் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர் அமைப்புகள், ஐ.டி. ஊழியர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்துகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் வளாகத்தின் உள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 2 நாட்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு

இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுவாமிநாதன்(பி.எச்.டி.) என்ற மாணவர் கூறியதாவது:–

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.

டாஸ்மாக் கடைகளை
மூட வேண்டும்

நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசு அந்த கடைகளை மூடினாலும், அங்கிருந்த கடைகளை தற்போது குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அந்த போராட்டத்தில் போலீசார் அடக்கு முறைகளை கையாளுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் வாயிலாக முன்வைக்கிறோம்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற பார்க்கிறது. அந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையும் மத்திய அரசுக்கு நாங்கள் வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story