மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இருந்த மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அதன்படி கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் 2 இடங்களில் இருந்த மதுபானக்கடைகளும் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தோகைமலை பகுதியில் செயல்பட்ட மதுபானக்கடைகளை புதிய இடத்தில் அமைக்க, மதுபானக்கடை அதிகாரிகள் தோகைமலை அருகே வெள்ளப்பட்டியில் உள்ள ஒரு கட்டிடத்தை தேர்வு செய்தனர்.

சாலை மறியல்

இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதியில் மதுபானக்கடை அமைக்க கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மதுபானக்கடை வேண்டாம் என்றால் வெள்ளப்பட்டியில் செயல்படும் ரேஷன் கடையையும் வேண்டாம் என்று சொல்லுங்கள் என அப்பகுதியை சேர்ந்த குடிபழக்கம் உள்ளவர்கள் சிலர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெள்ளப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தோகைமலை- திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் கூறுகையில், தங்கள் கணவர் குடிபழக்கம் உள்ளவராக இருந்தாலும், எங்களின் குழந்தைகளாவது குடிபழக்கம் இல்லாதவர்களாக வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். மேலும் எங்கள் பகுதி காட்டு பகுதியாக இருப்பதால் மதுபானக்கடை வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இதனை மீறி வெள்ளப்பட்டியில் மதுபானக்கடை அமைத்தால் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்போம் என்று கூறினர். இதையடுத்து வெள்ளப்பட்டி பகுதியில் மதுபானக்கடை அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தோகைமலை- திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story