பறக்கையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் சாலையோர வீடுகளுக்குள் புகுந்தது 15 பேர் காயம்


பறக்கையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் சாலையோர வீடுகளுக்குள் புகுந்தது 15 பேர் காயம்
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

பறக்கையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் சாலையோர வீடுகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,


நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மணக்குடிக்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தெங்கம்புதூர் பால்குளத்தை சேர்ந்த ராபின் என்பவர் ஓட்டினார். இந்த பஸ் பறக்கை காந்திபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த பஸ் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் புகுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

இந்த விபத்தில் ராஜப்பன் மற்றும் வள்ளியம்மாள் ஆகியோரின் வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகள் மீது பஸ் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்புற கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. அப்போது பஸ்சின் முன் இருக்கையின் அருகே நின்றுகொண்டு பயணம் செய்த ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரெனிஷா (23) என்பவர் பஸ்சுக்குள் இருந்து, உடைந்த முன்புற கண்ணாடி வழியாக ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

15 பேர் காயம்


வழுக்கம்பாறையைச் சேர்ந்த மேரி (60), பறக்கை ஹரிகரஅம்மாள் (57), பணிக்கன்குடியிருப்பு சுயம்பு (70), கீழசரக்கல்விளையைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் ஜெயந்தி (33), பஸ் டிரைவர் ராபின் மற்றும் சில பயணிகளும் பஸ்சின் கம்பிகளில் மோதியதால் காயமடைந்தனர். பஸ் மோதியதில் வீட்டுக்குள் இருந்த ராஜப்பனின் மனைவி சொர்ணம் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ரெனிஷா, மேரி, ஹரிகரஅம்மாள், சுயம்பு, ஜெயந்தி ஆகிய 5 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்துக்குள்ளான பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதற்காக பஸ்சை இழுத்துச் செல்லும் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

போராட்டம்


இதற்கிடையே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். சேதம் அடைந்த வீடுகளை சீரமைத்துத்தர, விபத்துக்கு காரணமானவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பஸ்சை அங்கிருந்து எடுக்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பிறகு ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாலதீபா மற்றும் மதுசூதனபுரம் கிராம நிர்வாக அதிகாரி சிவசங்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

மின் தடை


வீடுகளில் அரசு பஸ் மோதியதில் வீட்டில் இருந்த மின் இணைப்புகள் சேதம் அடைந்து மின்சாரம் தடைபட்டது. மின்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த மற்ற இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

பின்னர், பஸ் அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகு சேதமடைந்த மின் இணைப்புகளை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story