அரசு வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்துபேசி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்


அரசு வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்துபேசி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

அரசு வக்கீல்களுடன் கலந்து பேசி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று புதுவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.

புதுச்சேரி

புதுவையில் அரசு வக்கீல்களாக ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிதாக அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி நக்கீரன் அரசு வக்கீலாகவும், கூடுதல் அரசு வக்கீலாக வெற்றி வீரமணியும் நியமிக்கப்பட்டனர்.

சிறப்பு அரசு வக்கீலாக ராமச்சந்திரமூர்த்தி, பாலமுருகன் ஆகியோரும், அரசு பொது வக்கீலாக பெருமாளும், கூடுதல் அரசு பொது வக்கீல்களாக முத்துவேல், பிரவீன், பக்கிரி, சந்தோஷ்குமார், பச்சையப்பன், பிரகாஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அரசு வக்கீல்களுடன், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று காலை நடந்தது.

சுயபரிசோதனை

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் கூறியதாவது:–

ஒரு குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது காவல்நிலைய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர். அப்போது வேறு அதிகாரி அங்கு வந்து பணியாற்றுவார். ஆனால் புதிதாக பணி ஏற்கும் விசாரணை அதிகாரிகள் அரசு வக்கீல்களுடன் கலந்து ஆலோசனை செய்வது கிடையாது. இதனால் நீதிமன்றங்களில் குற்றங்களை நிரூபிக்க முடிவதில்லை. எனவே போலீசாரால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இதுபோன்ற நிலை இல்லாமல் இருந்தது. இதற்கு அரசு வக்கீல்களுடன் விசாரணை அதிகாரிகள் கலந்துரையாடல் செய்தது தான். சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, கைது செய்வது உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்கள் தொடர்பாகவும் வக்கீல்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி மேற்கொள்கின்றனர். இதனால் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படும் நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகின்றனர். எனவே புதுச்சேரி போலீசார் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவாதிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விசாரணை தன்மையை பல்வேறு விதங்களில் மேம்படுத்துவது, குற்றவழக்குகளில் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, அறிவியல் சார்ந்த விசாரணைகளை சிறப்பாக கையாளுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெண்கள் எதிரான வழக்கு விசாரணையில் புதுவை போலீசார் முன்னணி போலீஸ் டி.ஜி.பி. பெருமிதம்

உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்துக்கு போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, ‘தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை புலனாய்வு செய்வதில் புதுவை போலீசார் முன்னணியில் இருந்து வருகிறார்கள். ஐகோர்ட்டு நீதிபதிகளில் சிலரிடம் பேசும் போது, எந்த மாதிரியான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை ஆகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த கூட்டம் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து நடைபெறும்’ என்றார்.


Next Story