சிந்துதுர்க் அருகே துயர சம்பவம் கடலில் குளித்தபோது மூழ்கினார்கள் என்ஜினீயரிங் மாணவர்கள் 7 பேர் பலி


சிந்துதுர்க் அருகே துயர சம்பவம் கடலில் குளித்தபோது மூழ்கினார்கள் என்ஜினீயரிங் மாணவர்கள் 7 பேர் பலி
x
தினத்தந்தி 16 April 2017 3:30 AM IST (Updated: 16 April 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

சிந்துதுர்க் அருகே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவ- மாணவிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் வந்திருந்த பேராசிரியர் ஒருவரும் பலியானார்.

மும்பை,

சிந்துதுர்க் அருகே கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவ- மாணவிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் வந்திருந்த பேராசிரியர் ஒருவரும் பலியானார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் மராத்தா மண்டல் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் 47 மாணவ -மாணவிகள் தொழில் பயிற்சிக்காக புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வந்தனர்.

சுற்றுலா சென்றனர்

இந்த மாணவ-மாணவிகளை 2 பேராசிரியர்கள் அழைத்து வந்தனர். அங்கு பயிற்சியை முடித்த மாணவர்கள் நேற்று காலை சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வன் வாய்ரி கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். பகல் 11.30 மணி அளவில் 30 மாணவ-மாணவிகள் கடலின் உள்ளே இறங்கி ஆனந்த குளியல் போட்டனர். மற்றவர்கள் கடற்கரையில் நின்று, அதன் எழில்மிகு காட்சியை ரசித்து கொண்டு இருந்தனர்.

அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகரித்து கொண்டே இருந்தது. ஆனால் மாணவர்கள் அதை பொருட்படுத்தாமல் உற்சாகமாக குளித்தனர். சிலர் கடலின் ஆழமான பகுதிக்கு நீச்சலடித்து சென்றனர்.

கடலில் மூழ்கினர்

இந்த நிலையில் திடீரென வந்த ஒரு ராட்சத அலை மாணவ-மாணவிகளை வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே இழுத்து சென்றது. இதில் சிலர் கடலில் மூழ்கினர்.

மேலும் சிலர் கடல் நீரில் தத்தளித்தபடி உதவிக்காக அபய குரல் எழுப்பினர். இதனால், கரையில் நின்ற மற்ற மாணவ-மாணவிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். கடலில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்றுமாறு அலறல் சத்தம் போட்டனர்.

இதை அறிந்து அங்கு நின்ற மீனவர்கள் மற்றும் உயிர்காக்கும் வீரர்கள் ஓடி வந்தனர். அவர்கள் மாணவ- மாணவிகளை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

8 பேர் பலி

இதற்கிடையே தகவல் அறிந்த அந்த பகுதி எம்.எல்.ஏ.வும், மாநில நிதித்துறை இணை மந்திரியுமான தீபக் கேசர்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 19 மாணவ-மாணவிகள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

மேலும் 11 பேர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 8 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பலியானவர்களில் 4 பேர் மாணவர்கள் மற்றும் 3 பேர் மாணவிகள். ஒருவர் பேராசிரியர்.

பெற்றோர் கதறல்

பலியானவர்களின் பெயர் விவரம் தெரியவந்தது. அவர்கள் பேராசிரியர் மகேஷ் மற்றும் மாணவ, மாணவிகள் முஜ்மீன் அனிகேத், கிரண் காண்டேக்கர், ஆர்த்தி சவான், அவதூத், நிதின் முத்னல்கர், கருணா பேர்டே, மாயா கோல்கே ஆவர்.

மேலும் உயிர் பிழைத்த சங்கேத் காட்வி, அனிதா, ஆகான்ஷா ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி பிண அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்து கொண்டு கதறி அழுதபடி வந்தனர். உடன் வந்த மாணவ-மாணவிகளும் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால் அப்பகுதி சோகமயமாக காட்சி அளித்தது.

எச்சரிக்கையை மீறி...


கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் உள்ளே இறங்கி குளிக்க வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்கள், மாணவர்களை எச்சரித்து உள்ளனர். ஆனால் மீனவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர்கள் கடலில் இறங்கி குளித்ததால் இந்த துயரம் நேர்ந்ததாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து மராத்தா மண்டல் கல்லூரி முதல்வர் கூறும்போது, “புனேயில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தொழில் பயிற்சிக்கு செல்ல மட்டுமே மாணவர்களுக்கு நான் அனுமதி கொடுத்து இருந்தேன். மாணவர்கள் கடல் பகுதிக்கு சுற்றுலா செல்லக்கூடாது என தடை விதித்து இருந்தேன். மேலும் சுற்றுலா சென்றால், என்ன நடந்தாலும் தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வதாக மாணவர்கள் கடிதம் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் துயரம் நேர்ந்து விட்டது” என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி புனேயில் இருந்து சுற்றுலா வந்த 14 கல்லூரி மாணவர்கள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டம் முர்டு பகுதி கடலில் மூழ்கி பலியானார்கள். இதையடுத்து சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க மராட்டிய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் மராட்டியத்தில் மீண்டும் கடலில் மூழ்கி 8 மாணவ- மாணவிகள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story