11. புயலுக்குப் பின்னே துயரம்


11. புயலுக்குப் பின்னே துயரம்
x
தினத்தந்தி 16 April 2017 4:02 PM IST (Updated: 16 April 2017 4:01 PM IST)
t-max-icont-min-icon

காலை வேளையில் கடற்கரையோரம் நடந்துபோகும்போது ஏற்படும் சிலிர்ப்பைச் சொற்களால் சொல்ல முடியாது.

காலை வேளையில் கடற்கரையோரம் நடந்துபோகும்போது ஏற்படும் சிலிர்ப்பைச் சொற்களால் சொல்ல முடியாது. நீலத் துணியை நீளவாக்கில் பல கைகள் விரித்துப் பிடித்ததைப்போலத் தோன்றும் அதன் அழகும், அதில் மச்சங்களாக மிதக்கும் படகுகளும், மெல்ல எழும்பி மேலே வரும் இளம்பரிதியும், பொன்மயமாக மாறும் வானமும், நிழற்பிம்பங்களாக விண்ணில் சிறகடிக்கும் பறவைகளும் நிகழ்காலத்தில் நம்மை நிறுத்தி வைக்கின்றன.

அச்சத்திற்குக் காரணம் நேரம். கடந்தகாலக் கசப்பையோ, எதிர்கால விளைவையோ சிந்திப்பதால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. சில நேரங் களில் கடந்தகால நிகழ்வை எதிர்காலத்திற்கு நீட்டிப் பார்த்து நிம்ம தியைத் தொலைக்கிறோம் நாம். சிந்தனையின் மூலம் பயத்தை வெல்ல முடியாது. சிந்திப்பதே பயத்திற்குக் காரணம். நிகழ்காலத்தில் நிலைகுத்தியிருக்கும்போது எந்த சிந்தனையும் தோன்றுவதில்லை. அதுவே தியானம்.

‘இவ்வளவு அழகாக இருக்கிற கடல் சில மாதங்களுக்கு முன்னால் எப்படிப் பொங்கியது’ என்று சிந்தித்தால் போதும், அலைகளெல்லாம் ராட்சதக் கைகளுடன் நம்மை நோக்கி வருவதைப்போலத் தோன்றும்.

சின்ன வயதில் தமிழ் மரபைப்பற்றி வாசிக்கும்போது, குறிஞ்சி, முல்லை, மருதத்தைவிட நெய்தலே என்னை அதிகம் வசீகரித்தது. கடலைக் கற்பனையால் மட்டுமே யூகித்திருந்த எனக்குக் கல்லூரி படிக்கும்போது முதல் முறையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிரமாண்டத்தில் நான் தொலைந்து போனேன். வாழ்க்கை அன்றி லிருந்து தொலைப்பதும், தேடுவதுமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. பணியாற்றிய இடங்களிலெல்லாம் கணக்கற்ற கடற்கரைக் கிராமங்கள். அங்கு ஆண்டுதோறும் புயலும், மழையும்.

இலக்கியங்களில் வாசிக்கும்போது நெய்தல் அழகாகவே இருக்கிறது. கோல மாவைப்போல பரந்து கிடக்கும் கடற்கரையில் சிறகை விரித்த கழுகுகள்போல குடில்கள். ‘அலையைப் பார்த்துக்கொண்டே இருந்தால் பசிக்கவே செய்யாது’ என்பது வெறும் கனவு மட்டுமே. ஒவ்வோர் இயற்கை இடர்பாட்டிலும் அதிகம் அல்லோகலப்படுவது நெய்தல் நிலமே. ஆனாலும் அங்கே வாழ்பவர்கள் அதற்காகக் கண்ணீரைச் சிந்துவதில்லை. பரந்த கடலின் பக்கத்தில் வாழ்வதால் அவர்கள் உள்ளமும் பரந்து விரிந்து காணப்படு கிறது. வீடற்றுப் போவதும், ஒரே காற்றில் சேர்த்தவற்றை இழப்பதும் அவர்களுக்குப் பழகிப் போனவை.

இடர்பாடுகள் வருகிறபோது இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தால் தவித்துப்போகிறவர்கள் நாம். நமக்கு இந்த இயற்கை விபத்துகளால் நிரந்தரமாக இருளில் மூழ்குபவர்களைப்பற்றி எண்ண நேரமில்லை. எத்தனையோ ஏழைகள் இல்லங்களை இழந்து வீதிக்கு வந்திருப்பார்களே என்று நம்மால் சிந்திக்க முடிவதில்லை.

வாழ்நாள் முழுவதும் திரட்டியவற்றைப் பறி கொடுத்துவிட்டு மீண்டும் வாழ்க்கையை முதலி லிருந்து ஆரம்பிக்க வேண்டிய அவர்களின் துயரம் நமக்குத் தெரிவதில்லை. நம் கைபேசியை உயிர்ப்பிக்க மின்சாரம் இல்லையே என்கிற கவலை நமக்கு. கைபேசி இல்லாதது கையுடைந்ததைப்போலத் தென்படுகிறது. தொலைக்காட்சித் தொடரை தவறவிட்டு விட்டோமே என்கிற தவிப்பு நமக்கு. மடிக்கணினியை மணிக் கணக்கில் பார்க்க முடியாதே என்கிற சோகம் நமக்கு. நடு வீதியில் அலைக்கழிபவர்களின் பசியும் வேதனையும் நமக்குப் பிடிபடாது. நாம் அவற்றை ஈரானியத் திரைப்படங் களில் பார்த்து கண்ணீர் சிந்துவோம். கண்ணுக்கு எதிரேயே கடந்து செல்பவர்களை உதாசீனப் படுத்துவோம்.

வீடில்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய துயரம் என்பது பாதுகாப்பான வீடுகளில் வாழ்கிற நமக்குத் தெரியாது. நமக்கு குடிசைகளின் ஆக்கிரமிப்பு தெரிந்த அளவிற்கு கோபுரங் களின் அத்துமீறல்கள் தெரிவதில்லை. பொட்டுக்கடலை போவதைக் கவனிக்கிற நம்மால் பூசணி போவதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

வீட்டுக்குள்ளிருக்கும்போதே அடிக்கிற காற்றும், தெறிக்கிற சாரலும் எப்போது இந்த அசுரப் புயல் அடங்கும் என்கிற அவாவை ஏற்படுத்திவிடுகின்றன. இயற்கையை சபிக்கவும் துணிந்துவிடுகிறோம். கட்டியிருந்த ஒற்றை அறையும் ஒடிந்து விழும்போது கொட்டுகிற சாரலில் வீதிக்கு வந்தவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர்கள் மட்டுமே நினைத்துப்பார்க்க முடியும். பசி, பகவானைக்கூடக் கையேந்த வைத்துவிடும்.

வீடு, வெறும் வாழும் இடம் மட்டுமல்ல. அது குடும்பம் குதூகலிக்கும் பிரதேசம். அத்தனை கவலைகளும் அந்தச் சின்ன வீட்டுக்குள் நுழைந்ததும் சிதறி ஓடி விடுகின்றன. அனைவரும் அமர்ந்து, இருப்பது கூழாக இருந்தாலும் பகிர்ந்து குடிக்கும்போது வாழ்க்கை நம்பிக்கையூட்டத் தொடங்குகிறது. களைத்து வந்தவர்கள் தரையைக் கட்டிலாக்கி கையைத் தலையணையாக்கி ஆழ்ந்து உறங்கும்போது துளிர்க்கும் வியர்வையை உலரச் செய்ய காற்றே விசிறியாக கையசைக்கிறது. அந்த ஒற்றை அறையில் இரும்புப் பெட்டியில் துணிகள். மூலையில் சமையல்கூடம். அங்கு இருட்டும்வரை பிள்ளைகள் படிப்பு.

ஏழைகளுக்கு வீடு கருவறையைப்போல கதகதப்பானது. வசதி வரவர வீட்டில் கழிப் பதைவிட வெளியே கழிக்கும் நேரமே அதிகம். வீடு அவர்களைவிட அவர்கள் பணியாளர் களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கோடீஸ்வரர்களுக்கு வீடு கல்லறை. அங்கே அவர்கள் பிரக்ஞையற்றுப் போய்விடுகிறார்கள்.

ஒரே நாளில் வீட்டை இழப்பவர்களின் வேதனை அலாதியானது. ஒரு நல்ல வீடு குடும்பத்தையே முன்னேற்றும். அங்கு பாம்புகளின் பயம் இருக்காது. தேள்கள் தெனாவட்டாக அங்குமிங்கும் ஓடாது. தானியங்கள் பூச்சியரிக்காது. பள்ளிப் புத்தகங்கள் பாழாகாது. அடிக்கடி தீ விபத்து ஏற்படுமா என்று நடுங்க வேண்டிய அவசியம் இருக்காது. உறுதியான வீடு ஒன்று அமைந்துவிட்டால் அடுத்த தலைமுறை அனைத்திலும் சிறந்து விளங்கத் தொடங்கும் என்பதை மீனவர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் நேர்வுகளில் நேரில் கண்டிருக்கிறேன்.

சென்ற ஆண்டு பிரளயம்போல வெள்ளம் வந்தது. அதில் எத்தனையோ இல்லங்கள் அடித்துச் செல்லப்பட்டன. யாரும் சொல்லாமலேயே இளைஞர்கள் கழுத்தளவு நீரில் சாதகம் செய்வதைப்போல நின்று சாதனை செய்தார்கள். முடியாதவர்கள் பாதுகாப்பாக வெள்ளத்தைக் கடப்பதற்கும், வேதனையைக் கடப்பதற்கும் அவர்கள் கலங்கரை விளக்கங்களாகக் காட்சியளித்தார்கள்.

அரசு கொடுக்கும் நிவாரணம் ஒருபுறமிருந்தாலும், ஆர்வலர்கள் கொடுக்கும் ஆறுதலாலேயே நல்ல சமூகம் கட்டமைக்கப்படுகிறது. உதவியைக் காட்டிலும் பெரிது உள்ளம். கொடுக்கிற நிதியைக் காட்டிலும் முக்கியம் காட்டுகிற அக்கறை.

கண்ணில் பட்ட இன்னொரு செய்தி இதயத்தை ஈரமாக்கியது. அண்மையில் வந்த வர்தாப் புயலில் பெசன்ட் நகரில் உள்ள ஓடைக்குப்பமும் பாதிக்கப்பட்டது. அங்கு தற்காலிகமே நிரந்தரமாக மாறிய ஓலைக்குடிசையொன்றில் விஜயா என்கிற 68 வயதுப் பெண்மணியும், அவர் பேரனும் வாழ்வதைப்போல வசித்து வந்தனர். காற்றுக்கு கண்ணிருக்கிறதா, நெஞ்சிருக்கிறதா! அது முதலில் காலால் உதைத்து கைவைத்தது அந்தக் குடிசையைத்தான்.

புயல் நின்றபின் அவர்கள் வாழ்க்கையில் அது வீச ஆரம்பித்தது. பேரனுக்குப் பெயர் ஆகாஷ் என்பதாலோ தெரியவில்லை, அன்று இரவு இருவரும் ஆகாசத்தைப் பார்த்து கடற்கரையில் தூங்க வேண்டிய நிலை. பகல் வேளையில் தார்ப்பாய் ஒன்று தற்காலிகக் கூரையானது. கிடைக்கிற சொற்ப வருவாயில் வீட்டை மறுபடிக் கட்டுவது சாத்தியமே இல்லை என்கிற நிலை. மீன்களைக் கழுவி வயிற்றைக் கழுவும் பெண்மணிக்கு அன்றாட வருமானம் 50 ரூபாயிலிருந்து 100 மட்டுமே. அவருக்கு மூன்று குழந்தைகள். மூவரும் தனித்தனியாக வாழ்கிறார்கள். துணைக்கு இருக்கிற பேரன் கொண்டு வருகிற சொற்பத் தொகையும் சேர்ந்து அவர்கள் வாழ்க்கை நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது.

இவர்கள் வாழ்க்கை இரு இளைஞர்கள் கண்களில் பட்டது. இருவரும் தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள். சுகன்யா சாமிநாதன் என்கிற 24 வயதுப் பெண் முதலில் பார்த்தவர். சதீஷ் என்பவரும் அக்கறை காட்டினார். அவரோடு இன்னும் சிலரும் இணைந்துகொண்டனர். அவர்கள் அத்தனை பேரும் சம்பளத்திலிருந்து பணத்தைக் கொடுத்து விஜயாவிற்கு புதிய வாழ்விடத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

நல்ல காரியத்திற்கு நிதியுதவி செய்யப் பலரும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அச்செயலை யார் தொடங்குவது என்பதே எப்போதும் வினாவாக இருக்கிறது என்பதே இச்செய்தி சொல்லும் சேதி.

அபிராமி மடம்

சென்ற ஆண்டு வெள்ளத்தின்போது எத்தனையோ சிற்றூர்களில் குடியிருப்புகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தில் அபிராமிமடம் என்கிற கிராமத்தை லயன்ஸ் கிளப்பைச் சார்ந்தவர்கள் தத்தெடுத்தார்கள். அந்த லயன்ஸ் மாவட்டத்தின் கவர்னர் குணராஜாவும், அச்சங்கத் தலைவர் கோபிநாத்தும் களத்தில் இறங்கினார்கள். நாற்பத்து மூன்று குடும்பங்கள். அவர்களுக்குப் போர்வையைத் தருவதிலும், ரொட்டித் துண்டு களைத் தருவதிலும் பலனில்லை என்பதைப் புரிந்துகொண்டார்கள். பல்வேறு திக்குகளில் பணத்தைத் திரட்டினார்கள். புதிய இல்லத்தை நிர்மாணிக்க முனைந்தார்கள். கழிவறையோடு கொண்ட வீடுகளையும், அவர்களுக்கு இல்லச் சாமான்களையும், மீன் பிடிக்க வலை களையும், பயணிக்க மிதிவண்டிகளையும் தருவித்துத் தந்தார்கள். இப்போது அந்த சங்க உறுப்பினர்கள் தீபாவளியையும், பொங்கலையும் அந்த ஊரில் கொண்டாடுகிறார்கள்.


(செய்தி தொடரும்) 

Next Story