வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பெண் பலி தந்தை, மகன் படுகாயம்
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மீது சொகுசு பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.
வாலாஜா,
வேலூர் மாவட்டம், நெமிலி தாலுகா ஆலப்பாக்கம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் நந்தகோபி (வயது 35), தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நர்மதா (26). இவர்களது மகன் கேசவகுமார் (7), 2–ம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்களில் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் பாலம் திருப்பத்தில் வந்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சொகுசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டது. மேலும் பஸ் சக்கரத்தில் நர்மதா சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
தற்தை – மகன் படுகாயம்இந்த விபத்தில் நந்தகோபியும், அவரது மகன் கேசவகுமாரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.