சிவகங்கை மாவட்டம் டி.புதூரில் கின்னஸ் முயற்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் போட்டியை காண வந்த 2 பார்வையாளர்கள் பரிதாப சாவு
சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் கின்னஸ் முயற்சியாக மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தில் தமிழ் புத்தாண்டையொட்டியும், ஜல்லிக்கட்டு போட்டியை உலக தரத்தில் உயர்த்தும் வகையிலும் ஜில்லுனு ஒரு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாபெரும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழர் பாரம்பரிய போட்டிகளை நினைவுக்கூரும் வகையிலும், குறைந்த நேரத்தில் அதிக காளைகளை அவிழ்த்துவிட்டு கின்னஸ் சாதனை முயற்சியாகவும் எம்.புதூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக எம்.புதூரில் கிரிக்கெட் மைதானம் போன்று, ஜல்லிக்கட்டு களம் அமைக்கப்பட்டது. அதில் அரண்மனை போன்று மாபெரும் அரங்கு அமைத்து, தமிழர் பண்பாட்டை விளக்கும் விதமாக சேர, சோழ, பாண்டியர் மண்டலங்களாக பிரித்து கேலரி அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் சேர, சோழ, பாண்டியர் என 3 பிரிவுகளாக மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு எம்.புதூரில் உள்ள கண்டி கருப்பர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, கோவில் காளைகள் ஊர்வலமாக ஜல்லிக்கட்டு களத்திற்கு அழைத்து வரப்பட்டன. பின்னர் கோவில் காளையை முதலில் அவிழ்த்துவிட்டு போட்டி தொடங்கியது. இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டியை ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவரும், இலங்கை மந்திரியுமான ஆறுமுகம் தொண்டமான், செந்தில் தொண்டமான், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
600 காளைகள்காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. போட்டியை காண சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதும், அதனை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சி செய்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் 600–க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. முன்னதாக களத்தில் சேர, சோழ, பாண்டியர் என 3 அணிகளாக மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.
84 பேர் காயம்இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியும், கீழே விழுந்தும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 84 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர், கண்டரமாணிக்கம், சிவகங்கை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பரிசுபோட்டியில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தெறிக்கவிட்ட முதல் 5 காளைகளின் உரிமையாளர்களுக்கும், அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் மலேசியா சுற்றுலா செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தந்தி டி.வி. சார்பில் மாடுபிடி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தலா 1 பவுன் தங்க நாணயம் 10 பேருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், மோட்டார் சைக்கிள், லேப்டாப், சைக்கிள் என 15 விதமான பரிசுகள் வழங்கப்பட்டன.
பார்வையாளர்கள் 2 பேர் சாவுஇந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண காரைக்குடியை அடுத்த மானகிரி அருகே உள்ள மேலமாகாணம் கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் திருநாவுக்கரசு(வயது 26) என்பவர் வந்திருந்தார். போட்டியின் போது சீறி வந்த காளை ஒன்று திருநாவுக்கரசுவை பயங்கரமாக முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதேபோல் போட்டியை காண காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியை சேர்ந்த பாஸ்கரன்(39) என்பவரும் வந்திருந்தார். இவர், ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது, காளை தன்னை முட்டிவிடுமோ என்ற எண்ணியுள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு பாஸ்கரன் இறந்துபோனார்.