நீர்மட்டம் 25.29 அடியாக குறைந்தது மேட்டூர் அணை வறண்டு போகும் அபாயம் மழை கைகொடுக்குமா?
நீர்மட்டம் 25.29 அடியாக குறைந்ததால், இன்னும் 2 மாதங்களில் மேட்டூர் அணை வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேட்டூர்,
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து என்பது முற்றிலும் இல்லாமல் போயிற்று. மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்வரத்தானது 75 சதவீதம் காவிரி ஆற்றை நம்பியே உள்ளது. காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தில் அங்குள்ள முக்கிய அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இருமாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீரை முழுமையாக அளிப்பது இல்லை.
நீர்வரத்து குறைந்ததுஅதாவது, பருவமழை நன்கு பொழியும் காலங்களில் கர்நாடகம் அங்குள்ள அணைகளில் தண்ணீரை தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்படும்போது, அந்த அணைகளுக்கு வரும் தண்ணீரை முழுமையாக காவிரி ஆற்றில் வெளியேற்றி விடுகிறது. ஆனால், மழை குறையும் காலங்களில் தங்கள் அணைகளில் முழுமையாக தண்ணீரை தேக்கி வைப்பதையே குறிக்கோளாக கொண்டு கர்நாடக அரசு செயல்படுகிறது. இந்த நடவடிக்கையால் பருவமழை குறையும் காலங்களில் தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது என்பது மிகவும் அரிதாக உள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் கர்நாடகத்தில் இருந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய தண்ணீர், முழுமையாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் பாசன தேவையை பூர்த்தி செய்யாத மேட்டூர் அணை குடிநீர் தேவையையாவது முழுமையாக பூர்த்தி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
வறண்டு போகும் அபாயம்நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதம் வரை மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு தமிழகத்தின் 12 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பருவமழை காலம் வரை அணையில் உள்ள நீர் இருப்பு குடிநீர் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பும், அணைக்கு நீர்வரத்தும் இதேபோல் நீடித்தால் மேட்டூர் அணை இன்னும் 2 மாதங்களில் வறண்டு போகும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் கோடை மழையோ அல்லது ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையோ முன்னதாகவோ பெய்ய வேண்டும். எனவே, மழை கைகொடுக்குமா? என தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.