காலிகரம்பு–வத்தல்மலை இடையே தார்சாலையாக அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்
காலிகரம்பு–வத்தல்மலை இடையே தார்சாலை அமைக்க வேண்டும்
தர்மபுரி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தர்மபுரி வட்ட மாநாடு தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் பச்சியப்பன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய பொருளாளர் மணி வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் கணேசன் அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் மல்லையன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவராக பச்சியப்பன், செயலாளராக கணேசன், பொருளாளராக மணி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
குடிநீர் பிரச்சினைதர்மபுரி மாவட்டத்தில் வறட்சியை முழுமையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும். தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராப்புறங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். கொண்டகரஅள்ளி ஊராட்சி காலிகரம்பு முதல் வத்தல்மலை இடையே மலைப்பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும். பொம்மிடியில் இருந்து முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வழியாக தர்மபுரி செல்லும் பழுதடைந்த தார்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி மகாராஜன் நன்றி கூறினார்.