ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8½ பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் அருகே உள்ள வாசவி நகர் 10–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (27). இந்த நிலையில் கடந்த, 14–ந் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தனது மனைவி சந்தியாவுடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அருண்குமார் சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 8½ பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பூஜை அறையில் மூன்று உண்டியலில் இருந்த ரூ. 1000 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
ஆம்லேட் சாப்பிட்டனர்அத்துடன் குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) இருந்த முட்டையை எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டுள்ளனர். மேலும் மாதுளம் பழம், ரஸ்க் போன்றவற்றையும் தின்று விட்டு வீட்டில் ஆங்காங்கே போட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அருண்குமார், நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பணம், நகை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்த அருண்குமார் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.