வாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருது நடிகை சரோஜாதேவி வழங்கினார்
வாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருதை நடிகை சரோஜாதேவி வழங்கினார்.
பெங்களூரு,
வாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருதை நடிகை சரோஜாதேவி வழங்கினார்.
நடிகை ஜெயந்திக்கு...பாரதிய வித்யா பவன் மற்றும் நடிகை சரோஜாதேவி ஆகியோர் சார்பில் திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக ‘பத்மபூஷண் டாக்டர் பி.சரோஜாதேவி தேசிய விருது–2017“ வழங்கும் விழா பெங்களூரு சாளுக்கிய சர்க்கிளில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டு, வாழ்நாள் சாதனைக்காக பிரபல நடிகை ஜெயந்திக்கு அந்த விருதை வழங்கினார். மேலும் சரோஜாதேவி, அவருக்கு விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கி கவுரவித்தார். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசியதாவது:–
நானும், நடிகை ஜெயந்தியும் நெருங்கிய தோழிகள். நாங்கள் திரைப்படங்களில் ஒன்றாக நடித்தபோது அதிகமாக பேசி சிரித்தபடி படப்பிடிப்பு தளங்களில் பொழுதை கழிப்போம். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. தமிழில் பாலும், பழமும் படத்தில் நான் நடித்தேன். கன்னடத்திலும் அதே பாத்திரத்தில் நான் நடித்தேன்.
திறமையாக நடித்துள்ளார்என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7–ந் தேதி. ஜெயந்தியின் பிறந்த நாள் ஜனவரி 6–ந் தேதி. பாருங்கள், எங்களுக்குள் உள்ள ஒற்றுமையை. ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் நான் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பேன். மறுநாள் அவர் எனக்கு வாழ்த்து கூறுவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்து பேசுகிறார்.
“மசனத ஹூவு“ என்ற கன்னட படத்தில் ஜெயந்தி நடித்த கதாபாத்திரத்தில் ஒரு காட்சி வரும். அதில் அவர் அற்புதமாக நடித்துள்ளார். அந்த காட்சியில் வேறு யாராலும் நடிக்க முடியாது. ஏன் என்னாலும் அது சாத்தியம் இல்லை. அவ்வளவு திறமையாக அவர் நடித்துள்ளார். ஜெயந்திக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.
இவ்வாறு சரோஜாதேவி பேசினார்.
அம்பரீஷ்இந்த விழாவில் முன்னாள் மந்திரியும், பிரபல நடிகருமான அம்பரீஷ், கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திரசிங்பாபு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரதிய வித்யா பவன் தலைவர் ராமானுஜா அனைவரையும் வரவேற்றார். விழாவில் நடிகைகள் சரோஜாதேவி, ஜெயந்தி ஆகியோர் நடித்த பல்வேறு படங்களில் இருந்து சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது.