டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அந்த வகையில் விருத்தாசலம் அருகே அரசக்குழியில் கடலூர்–விருத்தாசலம் நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த கடையை புதுக்கூரைப்பேட்டையில் குப்பநத்தம் செல்லும் சாலையில் உள்ள தனிநபர் ஒருவர் இடதில் அமைக்க போவதாகவும், அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த கிராமத்து மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து, முற்றகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர், அங்கு வந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தர்ணா போராட்டம்இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் அனைவரும், விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கிருந்த போலீசாரிடம், எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி ஒரு மனு ஒன்றையும் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து கிராமத்து சென்ற பொதுமக்கள் அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு இருந்த கட்டிடத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இதுபற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உங்களது கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வராது என கூறியதை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இவ்வாறு ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.