கார்–டிப்பர் லாரி மோதல் உடல் நசுங்கி விவசாயி பலி; 3 பேர் படுகாயம் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குண்டலுபேட்டை அருகே காரும், டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.
கொள்ளேகால்,
குண்டலுபேட்டை அருகே காரும், டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி ஒருவர் உடல் நசுங்கி பலியானார். அவருடன் காரில் சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விவசாயிசாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கக்களூரு கிராமத்தைச் சேர்ந்தவர் பசவண்ணா. விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பசவண்ணாவின் மாமியார் வீடு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா நாகனாபுரா கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் பசவண்ணாவின் மனைவியும், அவருடைய குழந்தைகளும் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அவர்களை பார்ப்பதற்காக பசவண்ணா நேற்று முன்தினம் காரில் கக்களூருவில் உள்ள கிராமத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன் அவருடைய நண்பர்கள் 3 பேரும் சென்றனர். காரை பசவண்ணா ஓட்டினார்.
கார்–டிப்பர் லாரி மோதல்அவர்கள் குண்டலுபேட்டை அருகே குருபரகுந்தி ஓம்காரா பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பசவண்ணா ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த பசவண்ணாவும், அவருடைய நண்பர்களும் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே விபத்துக்கு காரணமான லாரி டிரைவரும், கிளீனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பசவண்ணா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசவண்ணாவின் நண்பர்களை மீட்க முயன்றனர்.
போக்குவரத்து பாதிப்புஆனால் கார் அப்பளம்போல் நொறுங்கியதில் அவர்கள் இடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து சுமார் 2 மணி நேரம் போராடி கியாஸ் கட்டர் மூலம் காரின் இடுபாடுகளை வெட்டி எடுத்து காரில் இருந்த 3 பேரையும் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பசவண்ணாவின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.