மராட்டியத்தில் கடலில் மூழ்கி பலியான என்ஜினீயரிங் மாணவ–மாணவிகள் 8 பேர் உடல்கள் பெலகாவி வந்தது
மராட்டியத்தில் கடலில் மூழ்கி பலியான என்ஜினீயரிங் மாணவ–மாணவிகள் 8 பேரின் உடல்கள் பெலகாவிக்கு வந்தது. தங்களது பிள்ளைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதார்கள்.
பெங்களூரு,
மராட்டியத்தில் கடலில் மூழ்கி பலியான என்ஜினீயரிங் மாணவ–மாணவிகள் 8 பேரின் உடல்கள் பெலகாவிக்கு வந்தது. தங்களது பிள்ளைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதார்கள்.
8 பேர் சாவுகர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஆல்பவி பகுதியில் மராத்தா மண்டல் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 47 மாணவ–மாணவிகள் தொழில் பயிற்சிக்காக மராட்டிய மாநிலம் புனேக்கு சென்றிருந்தார்கள். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்தில் உள்ள மால்வன் வாய்ரி கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு கடலில் இறங்கி மாணவ, மாணவிகள் குளித்தார்கள்.
அப்போது 3 மாணவிகள் உள்பட 8 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். பின்னர் அவர்களது உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், பலியான மாணவ, மாணவிகளின் பெயர்கள் சங்கீத், அனிகீத், சந்தோஷ், உஜாமன், கிரண், மகேஷ், அனிதா, முஜாமீன் என்று தெரியவந்தது.
பெலகாவிக்கு உடல்கள் வந்ததுஇந்த நிலையில், பலியான 8 பேரின் உடல்களும் மராட்டியத்தில் இருந்து நேற்று அதிகாலையில் பெலகாவி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர்களது உடல்களை பார்த்து மராத்தா மண்டல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கதறி அழுதார்கள். பின்னர் 8 பேரின் உடல்களும், அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, தங்களது பிள்ளைகளின் உடல்களை பெற்றோர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றார்கள்.
தங்களது மகன், மகளின் உடலை பார்த்து பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். அந்த காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. அதன்பிறகு, மாணவ, மாணவிகளின் உடல்களுக்கு, அவர்களது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகள் 8 பேர் பலியான சம்பவம் பெலகாவியில் நேற்றும் சோகத்தை ஏற்படுத்தியது.