ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஊட்டி,
மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும் 3–ம் நாள் உயிருடன் எழுந்து பரலோகம் சென்றார் என்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெரிய வெள்ளிக்கிழமையை துக்க நாளாகவும், கல்லறையில் இருந்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் என்ற மகிழ்ச்சி நாளாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.
40 நாட்கள் ஏசு உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில் ஈஸ்டர் தினத்துக்கு முன்பு 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். ஈஸ்டர் நாளில் உபவாசத்தை முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் விருந்து உணவு சாப்பிடுவார்கள். இந்த நாளில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சிறப்பு ஆராதனைஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிராரர்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். முன்னதாக நேற்று முன்தினம் ஊட்டி இருதய ஆண்டவர் ஆலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற பிரார்த்தனையில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் டாக்டர் அமல்ராஜ் கலந்து கொண்டு ஈஸ்டர் தின நற்செய்தியை வழங்கினார்.
இதில், ஆலய பங்கு தந்தை ஜான்ஜோசப் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பிங்கர் போஸ்ட் திரெசா அன்னை ஆலயத்தில் அருட்தந்தை அமல்ராஜ் தலைமையிலும் செயிண்ட் மேரிஸ் புனித மரியன்னை ஆலயத்தில் அருட்தந்தை வின்சென்ட் தலைமை யிலும், குருசடி திருத்தலத்தில் அருட்தந்தை பீட்டர் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சி.எஸ்.ஐ. திருச்சபைகள்தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஆலய பங்கு தந்தை ஜான்ஜோசப் தலைமையில் கூட்டுதிருப்பலி நடைபெற்றது. இதில் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சி.எஸ்.ஐ. திருச்சபைகளான புனித தாமஸ் ஆலயத்தில் சகோதரர் ஜெரோம் தலைமையிலும், வெஸ்லி ஆலயத்தில் ஸ்டீபன் ராஜ் தலைமையிலும் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதே போல் ஐ.சி.ஆர்.எம். திருச்சபையில் சகோதரர் ராஜன் சாமுவேல், தலைமையிலும், நல்வாழ்வு திருச்சபையில் சகோதரர் சூரி ஸ்டீபன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.