நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: முல்லைப்பெரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் பழைய தபால்நிலைய ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் செல்வம் (வயது 19). இவர் வீரபாண்டியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் மார்க்கையன்கோட்டை செல்லும் வழியில் உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிப்பதற்காக செல்வம் சென்றார்.

சிறிது நேரம் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக்கொண்டிருந்த செல்வம் நீச்சல் அடித்தபடியே ஆழமான பகுதிக்கு சென்றார். இதை அவருடைய நண்பர்கள் யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கரைக்கு திரும்பிவந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய செல்வம் மூச்சுத்திணறி பலியானார்.

உடல் மீட்பு

இந்த நிலையில் தங்களுடன் செல்வம் இல்லாததை அறிந்த அவருடைய நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருப்பாரோ? என முதலில் நினைத்தனர். ஆனால் கரைப்பகுதியில் அவருடைய உடைமைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆற்றில் குதித்து அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னமனூர் போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசாருடன் இணைந்து ஆற்றில் இறங்கி செல்வத்தை தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் செல்வத்தின் உடலை அவர்கள் மீட்டனர். அதைத்தொடர்ந்து, அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story