அவினாசி அருகே காட்டுப்பகுதியில் செத்துக் கிடந்த மான்


அவினாசி அருகே காட்டுப்பகுதியில் செத்துக் கிடந்த மான்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே காட்டுப்பகுதியில் மான் செத்துக்கிடந்தது.

அவினாசி,

அவினாசி அருகே குப்பேகவுண்டன்புதூர் காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. தற்போது கடும் வறட்சி நிலவுவதால் குப்பேகவுண்டன்புதூர் பகுதியில் தண்ணீர் இல்லை. பச்சை புற்களும் இல்லை. இதனால் மான்களுக்கு புற்களும் கிடைக்கவில்லை. தண்ணீர் கிடைக்காமலும் தவிக்கின்றன.

இதையடுத்து இவை தண்ணீர் தேடியும், புற்களை தேடி அருகில் உள்ள தோட்டங்களுக்கும், ஊர்களுக்குள்ளும் சென்று விடுகின்றன. அப்போது அந்த மான்களை நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறுகிறது. இதில் மான்கள் செத்து விடுகின்றன.

செத்துக்கிடந்த மான்

இந்த நிலையில் அவினாசியை அடுத்த குப்பேகவுண்டன்புதூர் காட்டுப்பகுதியில் மான் ஒன்று செத்து கிடந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு செத்து கிடந்த மான் 2½ வயது உடைய ஆண் புள்ளி மான், என்றும் தெரியவந்தது. மேலும் மானின் உடலில் நாய்கள் கடித்து குதறியதற்கான தடயம் ஏதும் இல்லை. எனவே நாய்கள் கடித்துதான் மான் செத்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

பின்னர் செத்து கிடந்த மானை மீட்டு தெக்காலூர் கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அந்தமான் புதைக்கப்பட்டது.


Next Story