சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் தண்ணீர் திருடிய மின்மோட்டார்கள் பறிமுதல்
சேடபட்டி அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
உசிலம்பட்டி,
பேரையூர் தாலுகா சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வண்டப்புலி ஊராட்சி. இந்த கிராமத்தில் கடந்த ஒருவருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர், ஊராட்சிகளின் உதவி இயக்குநனர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முறைகேடாக மின்மோட்டார்கள் வைத்து குடிநீரை எடுக்கும் நபர்களுக்கு 15 தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பினார்.
அதில் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் கிடைப்பதற்கு வசதியாக, மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் எடுக்கக்கூடாது என்றும், மீறுபவர்களின் குடிநீர் இணைப்புத்துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வண்டப்புலி கிராமமக்கள் நேற்றுமுன்தினம் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை என திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சென்ற பேரையூர் தாசில்தார் சிவகுமார், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், கிராமநிர்வாக அலுவலர் தங்கமுனியம்மாள், சாப்டூர் போலீசார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்மோட்டார்கள் பறிமுதல்அதில் மின்மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீரை திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு வருவதால், எங்கள் பகுதியில் முற்றிலும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொடர்ந்து வராததால் கடும் அவதியடைந்து வருகிறோம் என்று கூறினர். அதைத்தொடர்ந்து உடனே விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் எச்சரிக்கையை மீறி மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் இருந்த 114 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யபட்ட மோட்டார் உரிமையாளர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டது. இந்த சோதனையில் ஊராட்சி செயலர் பரமசிவம் உள்பட வருவாய்த்துறையினர், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.