பொது கிணற்றை சுத்தம் செய்த இளைஞர்கள்


பொது கிணற்றை சுத்தம் செய்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

பொது கிணற்றை சுத்தம் செய்த இளைஞர்கள்

கடையம்,

கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி அருணாசலம்பட்டி கிராமத்தில் பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து குடிநீர் தொட்டியில் ஏற்றி இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கிணற்றில் குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்பட்டதால் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்படும் இந்த கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது கோடை காலம் நிலவுவதால் இந்த கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனையடுத்து அந்த ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பயன்படாமல் உள்ள அந்த கிணற்றை சுத்தம் செய்வதென முடிவு செய்தனர். அதன்படி அந்த கிராமத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த கிணற்றுக்குள் இறங்கி குப்பை, கூளங்களை சுத்தம் செய்தனர். தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க கிராமத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. எனவே மின்மோட்டார் மூலம் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அத்துடன் அந்த கிணற்றில் மீண்டும் குப்பை, கூளங்கள் விழா வண்ணம் அந்த கிணற்றை மூடி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story