கோவில்களின் வரலாற்றை ஆங்கிலத்திலும் வைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


கோவில்களின் வரலாற்றை ஆங்கிலத்திலும் வைக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களின் வரலாற்றை ஆங்கிலத்திலும் வைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாட்களில் சமூகப்பணிகளில் அக்கறை காட்டி வருகிறார். கடந்த வாரத்தில் இருந்து கோவில்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.

அதன்படி நேற்று அவர் காந்தி வீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலுக்கு சைக்கிளில் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோவில் குளத்தை பார்வையிட்டார்.

அப்போது, கோவில்களின் சிறப்புகள் குறித்து வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ளும் விதமாக அவற்றை ஆங்கிலத்திலும் வைக்க வேண்டும் என்று கூறினார். கோவில் குளங்களில் உள்ள தண்ணீரை விஞ்ஞான முறைப்படி சுத்திகரிப்பு செய்யுமாறும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சித்தானந்தசாமி


அதன்பின் அங்கிருந்து கருவடிக்குப்பம் சித்தானந்த சாமி கோவிலுக்கு சைக்கிளில் சென்றார். அங்கு கோவில் குளத்தை பார்வையிட்ட அவர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தார். கோவில் நிர்வாகிகளை அழைத்த அவர் கோவில் மற்றும் குளங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன், மக்கள் தொடர்பு அதிகாரி குமரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தனது ஆய்வின்போது கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–

 100 கோவில்களை பார்க்க திட்டம்


புதுச்சேரி கோவில்களின் வரலாறுகளை பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கிலத்திலும் வைத்திருக்கவேண்டும். புதுவையில் உள்ள ஆயிகுளத்தில் தன்னார்வல தொண்டு நிறுவனங்களின் மூலம் சிரமதான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனெனில் தண்ணீர் சேகரிப்பு என்பது முக்கியமானது. ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகக்கூடாது. கோவில் குளங்களை பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக வருகிற ஜூன் மாதம் கோவில் அறங்காவலர்களுடன் கவர்னர் மாளிகையில் கூட்டம் நடத்தப்படும்.

இந்த ஆண்டில் 100 கோவிலுக்காவது சென்று பார்க்க திட்டமிட்டுள்ளேன். அப்போது சேகரிக்கப்படும் காட்சிகளை வைத்து குறும்படம் தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story