சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது மக்கள் வீடுகளில் முடங்கினர்


சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது மக்கள் வீடுகளில் முடங்கினர்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாத காலங்கள் கோடை காலம் ஆகும். பருவமழை பொய்த்தது மட்டுமின்றி, ஜனவரி மாதம் முதலே வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கி விட்டது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது.

தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை தாங்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னையில் 106 டிகிரி

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 109.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வேலூரில் 109.22 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகபட்ச வெயில் அளவு பதிவாகி வந்த கரூரில், நேற்று சற்று குறைந்து 108.32 டிகிரி பதிவானது.

இந்த வருட கோடை கால வெயிலில் முதன்முறையாக தலைநகர் சென்னையில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 106.34 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீடுகளில் முடங்கினர்.

இதுதவிர கடலூர், தர்மபுரி, மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளிலும் வெயில் சதம் அடித்தது. தவிர கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வெயில் அதிகமாகவே வாட்டி எடுத்தது.

அனல் காற்று

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். பாதசாரிகள் மர நிழல் கிடைத்துவிடாதா? என்ற ஆவலில் வியர்வை ஊற்றெடுக்க நடந்து செல்கின்றனர்.

வெயில் காரணமாக குளிர்பானங்கள், பழச்சாறு விற்பனை செய்யும் கடைகள் சாலைகளில் ஆங்காங்கே தொடங்கி விட்டன. இதனை அருந்தி மக்கள் கோடையின் கொடுமையை சற்று தணித்துக்கொள்கிறார்கள். மேலும் தர்பூசணி, கற்றாழை, இளநீர் விற்பனையும் களைகட்டி உள்ளன.

வெயில் நேரத்து நோய்களான கண்வலி, வயிற்றுவலி, தோல் நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் கூடிவருகிறது.

‘பீர்’ விற்பனை ‘ஜோர்’

அனல் பறக்கும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க நினைக்கும் மதுப்பிரியர்கள் மதுக்கடைகளில் பீர் அருந்துவதால், அதன் விற்பனை அதிகரித்து உள்ளது.

அதேபோல உடல் சூட்டை போக்க சிறுவர்கள் பட்டாளம் நீச்சல் குளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வெயில் காரணமாக சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்கள் விடுமுறை நாளான நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

வெயில் கொடுமை சினிமா தொழிலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெயிலுக்கு பயந்து வெளிப்புற படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலும் படப்பிடிப்புகளை இரவு நேரங்களிலேயே நடத்தி விடுகின்றனர். 

Next Story