களக்காடு அருகே சிறுத்தையின் அட்டகாசம் தொடருகிறது


களக்காடு அருகே சிறுத்தையின் அட்டகாசம் தொடருகிறது
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே சிறுத்தையின் அட்டகாசம் தொடருகிறது. மேலும் ஒரு ஆட்டை அடித்துக்கொன்றதால் அந்த கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்து உள்ளனர்.

களக்காடு,

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 80). விவசாயி. இவர் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்து இருந்தார். நேற்று முன் தினம் இரவில் ஆடுகள் திடீரென மிரண்டு சத்தம் போட்டன. இதைக்கேட்டு மூர்த்தி வெளியே வந்து பார்த்தார்.

அப்போது சிறுத்தை ஒரு ஆட்டை அடித்துக்கொன்று வாயில் கவ்வியப்படி அங்கிருந்து வேகமாக சென்றது.

இதனை பார்த்து மூர்த்தி சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து பார்த்து சத்தம் போட்டனர். உடனே ஆட்டின் உடலை போட்டு விட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடி விட்டது. இதுகுறித்து மூர்த்தி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தை அடித்துக்கொன்ற ஆட்டின் உடலை பார்வையிட்டனர்.

பீதியில் பொதுமக்கள்

ஏற்கனவே கடந்த 13-ந் தேதி இரவில் மூங்கிலடியில் சாமுவேல் ராஜிக்கு சொந்தமான 4 ஆடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றது. இதில் இருந்து அவர் மீள்வதற்குள் மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை அடித்துக்கொன்று விட்டு தப்பியோடி விட்டது.

சிறுத்தையின் அட்டகாசம் தொடருவதால் அந்த கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்து உள்ளனர்.

எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

கரடிகளை தொடர்ந்து சிறுத்தை அட்டகாசமும் தலை தூக்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.


Next Story