பாபநாசத்தில் தீ விபத்து: 5 கூரை வீடுகள்- 3 கடைகள் எரிந்து நாசம்


பாபநாசத்தில் தீ விபத்து: 5 கூரை வீடுகள்- 3 கடைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் நடந்த தீ விபத்தில் 5 கூரை வீடுகள், 3 கடைகள் எரிந்து நாசம் அடைந்தன. தீ விபத்தின்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது35). நேற்று சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இவரது வீட்டு கூரையில் தீப் பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அருகே இருந்த மோகன்(26), பாண்டியன் (36), சேகர்(34), தவமதி(55) ஆகியோருடைய கூரை வீடுகளுக்கும் பரவியது. அதே பகுதியில் இருந்த 2 சலூன் கடைகளும், கருணாகரன் என்பவருடைய சைக்கிள் கடையும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தின்போது சேகரின் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில் இருந்து தீப்பொறி கிளம்பியதில் பாரதிதாசன் என்பவருடைய வீட்டில் இருந்த ஏ.சி., பிரிட்ஜ் ஆகியவை வெடித்து சிதறின. அவருடைய வீட்டு ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம், தஞ்சை தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அதிகாரிகள் ராஜேந்திரன், கோபால்சாமி ஆகியோர் தலைமையில் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

நிவாரணம்

இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. 4 ஆடுகள் தீயில் கருகி இறந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும் அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் ரூ.5 ஆயிரம் நிதி உதவி மற்றும் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். அமைச்சர் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அப்போது கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் ராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story