புனேயில் வாலிபர் அடித்துக்கொலை மனைவி உள்பட 3 பேர் கைது
புனேயில், வாலிபரை அடித்துக்கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே,
புனேயில், வாலிபரை அடித்துக்கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கணவர் மீது தாக்குதல்புனே, பிம்பிரி சின்ஞ்வாட் யமுனாநகரை சேர்ந்தவர் ஜான்(வயது29). இவரது மனைவி கிறிஸ்டினா (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் ஜானை பிரிந்து பிம்பிரி சின்ஞ்வாட், நிக்டி பகுதியில் உள்ள தனது தாய், தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ஜான் குடிபோதையில் கிறிஸ்டினாவின் வீட்டிற்கு வந்தார். பின்னர் தன்னுடன் வருமாறு கூறி மனைவியுடன் சண்டை போட்டார். மேலும் மனைவியின் தாய், தந்தையை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்டினா மற்றும் அவரது தாய் லூசியா(55), தந்தை சூரியகாந்த்(58) ஆகியோர் சேர்ந்து ஜான் மீது மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கீழே விழுந்த அவரை 3 பேரும் சேர்ந்து கம்பால் சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கு கிடந்த சிமெண்டு பலகையை அவர் தலையில் போட்டு காயப்படுத்தினர்.
மனைவி உள்பட 3 பேர் கைதுஇது குறித்து தகவல் அறிந்து நிக்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயங்களுடன் கிடந்த ஜானை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜானின் மனைவி கிறிஸ்டினா, மாமனார் சூரியகாந்த், மாமியார் லூசியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.