வலியை உணரும் சிறு மூளை கண்டுபிடிப்பு!


வலியை உணரும் சிறு மூளை கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 17 April 2017 1:27 PM IST (Updated: 17 April 2017 1:26 PM IST)
t-max-icont-min-icon

வலி மற்றும் வெப்பம் போன்ற உணர்வுகளை நம் உடல் எப்படி உணர்கிறது அல்லது இனம் கண்டுகொள்கிறது என்பதைக் கண்டறிய இதுவரையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எந்த ஒரு உணர்வின் விளைவும் அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் முழுமையாகத் தெரியும் என்பதை வலியுறுத்த ‘தலைவலியும் ஜுரமும் தனக்கு வந்தால்தான் தெரியும்‘ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதிலிருந்து, வலி எனும் உணர்வை சொல்லிப் புரியவைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை அறியலாம். அதுபோலவே சூடு, குளிர்ச்சி போன்ற உணர்வுகளையும் வார்த்தைகளில் விளக்குவது கடினம்.

வலி மற்றும் வெப்பம் போன்ற உணர்வுகளை நம் உடல் எப்படி உணர்கிறது அல்லது இனம் கண்டுகொள்கிறது என்பதைக் கண்டறிய இதுவரையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில், மனித உடலில் உள்ள மத்திய நரம்பு மண்டலம் (Central nervous system) அமைப்பின் இரு முக்கிய அங்கங்களான மூளை மற்றும் மூளைத் தண்டுவடம் ஆகிய இரண்டு பகுதிகள்தான் வெப்பம், வலி அல்லது டெக்சர் என்று அழைக்கப்படும் துணியின் இழை அமைப்பு ஆகியவற்றை உணரும் திறன்கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இதுவே பெருவாரியான அறிவியலாளர்கள் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது, இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வலி தொடர்பாக எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலிகளின் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான புறத்திய அல்லது ஓரஞ்சார்ந்த நரம்பியல் அமைப்பு   (peripheral nervous system)   வலியை உணர்வது மட்டுமல்லாமல் அதற்கான எதிர்வினை அல்லது அதனை சரிசெய்வதற்கான செயல்பாடுகளையும் மேற்கொள்கிறது என்பதை உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக, மனிதர்கள் மற்றும் எலிகள் உள்ளிட்ட பல விலங்குகளில் ஓரஞ்சார்ந்த நரம்பியல் அமைப்பானது சுற்றுச்சூழலில் இருந்து பெறப்படும் வெப்பம் போன்றவை தொடர்பான தகவல்களை மைய நரம்பியல் அமைப்பான மூளைக்கு கொண்டுசெல்லும் வேலையை மட்டும்தான் செய்கிறது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த புதிய ஆய்வில், ஓரஞ்சார்ந்த நரம்பியல் அமைப்பின் முக்கிய அங்கமான நரம்பு செல்திரள்   (ganglia)  (அல்லது ஒரு நரம்புக் குவியல்) கதகதப்பு அல்லது வலி போன்ற உணர்ச்சிகளை உணர்வது மட்டுமல்லாமல், அதற்கான எதிர்வினையையும் புரியக்கூடிய ஒரு சிறு மூளையாக (minibrain) செயல்படும் திறன்கொண்டது எனும் அறிவியல் உண்மை உலகில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

எலிகளின் உடலில் உள்ள நரம்பு செல்திரள்கள் சிறு மூளையாக செயல்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அது எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பான முழுமையான அறிவியல் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திய நரம்பியல் விஞ்ஞானி பேராசிரியர் நிக்கிதா கேம்பர். மேலும், ’’எலிகளில் உள்ள இந்த நரம்பு செல்திரள் செயல்பாடு மனிதர்களின் உடலில் அதுபோலவே செயல்படுகிறதா? என்பதும் மேலதிக ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட வேண்டும்’’ என்கிறார் கேம்பர்.

அதெல்லாம் சரி, இதனால் நமக்கென்ன லாபம் என்றுதானே சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

நிச்சயமாக நமக்கு பலன் இருக்கிறது! அதாவது, இருதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் மற்றும் இதர பல காரணங்களால் உண்டாகும் வலி மனிதனை பாடாய்ப் படுத்திவிடும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அத்தகைய வலிகளுக்கான நிவாரணத்தை கொடுக்கும் இதுவரையிலான மருந்துகள் நம் உடலின் மைய நரம்பியல் அமைப்பான மூளையைத்தான் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. அதன் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக குமட்டுதல், பழக்கப்பற்று   (addiction)  மற்றும் சகிப்புத்தன்மை பிரச்சினைகள் என பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்த புதிய ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் மூளையைத் தவிர்த்து ஓரஞ்சார்ந்த நரம்பியல் அமைப்பின் நரம்பு செல்திரள்களை இலக்காகக் கொண்டு செயல்படும் வலி நிவாரண மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம். அதன் மூலமாக பக்க விளைவுகளே இல்லாத மற்றும் பாதுகாப்பான வலி நிவாரணிகள் உற்பத்தி செய்யப்படக் கூடிய பொன்னான வாய்ப்புகள் உருவாகும் என்பது உறுதி!

ஆக, தற்போது தொடக்க நிலையில் உள்ள சிறு மூளைகள் தொடர்பான இந்த ஆய்வு, மனிதர்கள் மற்றும் வேறு பல ஆய்வு மாதிரி விலங்குகள் மீதான மேலதிக ஆய்வுகளுக்குப்பின் பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க பல வலி நிவாரணிகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!

Next Story