கிணறுதோண்டும்போது மண்சரிந்து தொழிலாளி பலி அரசு நிவாரண தொகை வழங்க குடும்பத்தினர் கோரிக்கை


கிணறுதோண்டும்போது மண்சரிந்து தொழிலாளி பலி அரசு நிவாரண தொகை வழங்க குடும்பத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 18 April 2017 4:45 AM IST (Updated: 17 April 2017 6:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து பலியான தொழிலாளியின் குடும்பத்தினர் நிவாரண உதவி வழங்க கோரி மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். அதில் திருவாடானை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– சமத்துவபுரத்தில் வசித்துவரும் சோமு முருகேசன் என்பவரின் மனைவி விஜயா என்பவர் தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.50 முதல் 1000 வரை செலுத்தினால் 5 வருடத்தில் வட்டியுடன் இருமடங்கு தொகை தருவார்கள் என்று கூறினார்.

அவரின் ஆசை வார்த்தையை நம்பிய நாங்கள் 35–க்கும் மேற்பட்டோர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.100 முதல் 1000 வரை செலுத்தி வந்தோம். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் விஜயா பத்திரம் வழங்கியுள்ளார். இந்தநிலையில் 5 ஆண்டு முடிவடைந்ததால் கடடிய தொகையை பெற்றுத்தருமாறு கேட்ட போது அந்த நிறுவனத்தை மூடிவிட்டனர் என்று கூறிவிட்டார். இதனால், 35 பேரும் தாங்கள் கட்டிய பணத்தை பெற முடியாமல் லட்சக்கணக்கில் பணத்தினை இழந்துவிட்டோம். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

அரசு நிவாரணம்

திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் மொங்கான்வலசை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சுந்தரி என்பவர் தனது மகள் ஸ்வேதா, மகன் சபரிவாசன் ஆகியோருடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– எனது கணவர் செல்வராஜ் கூலி வேலை செய்து எங்களை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 20–ந் தேதி சண்முகவேல் பட்டிணத்தில் கிணறு தோண்டும் போது மண்சரிந்து பலியாகி விட்டார். எனது கணவர் இறந்தபின்னர் அவருக்கு அரசு சார்பில் எந்தவொரு நிவாரண தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.

கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால், எனது குழந்தைகளை படிக்க வைக்கவும், உணவு வழங்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனவே, எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஊருணியை தூர்வார வேண்டும்

புதுமடம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த உபைது ரகுமான் தலைமையில் அளித்த மனுவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் புதுமடம் பகுதியில் அகஸ்தியர்கூட்டம், அம்மாபட்டினம், நாரையூரணி என பல கிராமங்கள் உள்ளன. இந்த பொதுமக்களுக்கு தண்ணீர் தேவையை நிறைவேற்றிவரும் தரவை ஊருணி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக தரவை ஊருணியை தூர்வாரி சீரமைத்து நிலத்தடி நீர்ஆதாரத்தினை மேம்படுத்தவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

திருவாடானை அருகே உள்ள அ.மணக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொண்டி–ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அ.மணக்குடி பஸ் நிறுத்தத்தில் வெயில் கொடுமையை போக்க நிழற்குடை அமைத்து தரவேண்டும், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்தவேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story