டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ராமேசுவரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமேசுவரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்,
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டகளை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கை களையும் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதம்பஸ்நிலையம் எதிரே காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில மீனவர் அணி பாசறை செயலாளர் வழக்கறிஞர் டோம்னிக்ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாதன், தலைவர் நாகூர்கனி, தொகுதி செயலாளர் ராஜா, இளைஞரணி நிர்வாகி ரெய்மண்ட்சகாயம், மாணவரணி நிர்வாகி பிரேம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு நிறைவடைந்த உண்ணாவிரதத்திற்கு பின்பு கட்சி நிர்வாகிகள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராமலிங்கம் தலைமையில் நகர் காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.