**வறட்சி பாதிப்பிலிருந்து விவசாயிகளை மீட்க அனைவரும் போராட வேண்டும் நல்லகண்ணு பேச்சு
தொடர் வறட்சியால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளை மீட்க அனைத்து தரப்பினரும் போராட வேண்டும்
விருதுநகர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமில்லாமல் வறட்சி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் மற்றும் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திவிருதுநகரில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன், விருதுநகர் நகர செயலாளர் காதர் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும் விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கட்சியின் தேசிய குழு உருப்பினர் நல்லகண்ணு கலந்து கொண்டு பேசியதாவது:–
பாதிப்பு
தமிழகம் முழுவதும் தொடர் வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வறட்சி காரணமாக பஞ்சம் பிழைக்க கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. முப்போகம் விளைந்தாலே 80 நாட்கள் தான் விவசாய வேலை இருக்கும். தற்போது விவசாய வேலை எதுவும் இல்லாத நிலையில் கிராமத்து பெண்கள் 10 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள்இதனை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நிர்வாண கோலத்திலும், தாலியறுத்தும் போராடி பார்த்து விட்டனர். பிரதமர் சந்திக்க மறுக்கிறார். தொடர்ந்து பாராமுகமாகவே இருந்து வருகிறார்.
கடன்விவசாய கடன்களை ரத்து செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். இவர் அம்பானியின் உறவினராவார். அம்பானிக்கும், அதானிக்கும் அவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்து விட்டு மேலும் கடன் வழங்குகிறார்கள். விவசாயி கடன் வாங்கி சாகுபடி செய்கின்றான். பயிர் கருகி விட்டால் அவனால் கடனை திருப்பி செலுத்த முடியாது. எனவே விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும்.
பொன்னகரம் பகுதியில் கிராமத்து பெண்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இதனை 200 நாளாக உயர்த்தித் தர வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தான். தினசரி ஊதியத்தினை ரூ.400–ஆக உயர்த்தி தர வேண்டும்.
தாமிரபரணியில் தண்ணீர் இல்லை. தூத்துக்குடியிலும், கோவில்பட்டியிலும் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தரப்படுகிறது. விருதுநகர், ராஜபாளையத்தில் அதை விட அதிக நாட்களாகிறது. ஆனால் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தினசரி 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.37–க்கு வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் 37 பைசா தான். ஆனால் நாம் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.25 கொடுத்துத்தான் வாங்குகிறோம். குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேண்டுகோள்வறட்சி பாதிப்படைந்த விவசாயிகளை மீட்க வேண்டியது நமது அனைவருடைய கடமையாகும். எனவே அனைத்து தரப்பினரும் விவசாயிகளை மீட்டெடுக்க போராட வேண்டும். வருகிற 25–ந்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இறுதியில் வட்டார நிர்வாகி பாலுச்சாமி நன்றி கூறினார்.