தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் தென்னிந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தல்
தென்னிந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கந்தசாமி, மாதேஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாது, காதர்மொய்தீன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்தின் நதிநீர் உரிமையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நியாயமான நிவாரண உதவி வழங்க வேண்டும்.
நதிகள் இணைப்புவறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும், மஞ்சளுக்கு ரூ.60 ஆயிரமும், இதர பயிர்களுக்கு ரூ.30 ஆயிரமும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ள மத்திய அரசு உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.