கிராமப்புற பகுதிகளில் புதிய மதுக்கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


கிராமப்புற பகுதிகளில் புதிய மதுக்கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 17 April 2017 7:34 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் புதிய மதுக்கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர் பிரச்சினை, வீட்டுவசதி, கல்விக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் புதிய மதுக்கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பலர் மனுக்கள் அளித்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கோபாலபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், தென்கரைக்கோட்டை பகுதியில் இருந்த மதுக்கடை அகற்றப்பட்டு கோபாலபுரம் பகுதியில் புதிய கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே மதுக்கடை அமைக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மின்சார இணைப்பு

தர்மபுரி அருகே உள்ள நடுஅள்ளி ஊராட்சி கொளகத்தூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், நடுஅள்ளி ஊராட்சியில் 2,500 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் ஊருக்கு அருகில் சவுளூர் ரோடு பகுதியில் பஸ்நிறுத்தம் அருகே இருந்த மதுக்கடை அகற்றப்பட்டு பஸ் நிறுத்தம் அருகிலேயே மீண்டும் கடை அமைக்க தனியார் நிலத்தில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு மதுக்கடை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். இதேபோல் மருக்காலம்பட்டி, ஆத்துமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில் தங்கள் கிராமப்பகுதிகளில் புதிய மதுக்கடைகளை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி இருந்தனர்.

பெரியாம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் வீடுகளுக்கு இதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பு கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்து உள்ளோம். மின்சார வசதி இல்லாததால் எங்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், மாணவ–மாணவிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.


Next Story