ராசிபுரம் அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார் போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகே, மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
ராசிபுரம்,
ராசிபுரம் தாலுகா பட்டணம் முனியப்பம்பாளையம் அருகே உள்ள கைலாசம்பாளையம் வெள்ளக்குட்டையைச் சேர்ந்தவர் மணியரசு. இவர் விவசாயிகளின் தோட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோபிகா (வயது 17). இவர் கடந்த ஆண்டு 10–ம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும், அப்போது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் அந்த பாடத்திற்கான தேர்வை எழுதிவிட்டு, தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
கடந்த சனிக்கிழமை தையல் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையொட்டி அவரது பெற்றோர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோபிகா மாயமானது தொடர்பாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பிணமாக மிதந்தார்இந்த நிலையில் கோபிகா பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மிளகாய் பொடியார் தோட்டத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 75 அடி ஆளமுள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். தண்ணீர் எடுத்து விடுவதற்காக அங்கு சென்ற விவசாயி ராஜேந்திரனின், மகன் விஜயகுமார் இதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கோபிகாவின் பிணத்தை கிணற்றில் இருந்து கயிறு மூலம் மீட்டனர்.
போலீசார் விசாரணைஇதற்கிடையில் சம்பவ இடத்திற்கு நாமகிரிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கோபிகா மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.