கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு தெரு மின்விளக்கை சரி செய்த போது பரிதாபம்
கிருஷ்ணகிரியில் தெரு மின்விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு கிருஷ்ணகிரியில் கோபாலகிருஷ்ணா காலனி பகுதியில் உள்ள தெரு மின்விளக்கில் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் உடல் கருகி பலியானார். மின்கம்பத்தில் தொங்கியவாறு அவரது உடல் இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணைஅவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மின்கம்பத்தில் தொங்கியவாறு இருந்த வெங்கடேசனின் உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.