கடலூரில் குறைகேட்பு கூட்டம்: 36 நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்
கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 36 நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்கு சென்று, அவர்களிடம் மனுக்களை பெற்றார்.
வீட்டு மனைப்பட்டாஅதைத்தொடர்ந்து இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்த பெண்ணாடம் கிராமத்தை சேர்ந்த 36 நரிக்குறவர்களுக்கு ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 420 மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை கலெக்டர் ராஜேஷ் வழங்கினார். இந்த மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார்.
விருத்தாசலம் அருகே பெரியாக்குறிச்சியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் தனுஷ் (வயது 13) கடந்த 26–6–2016 அன்று சுவர் இடிந்து விழுந்து இறந்தார். இதற்காக முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ராஜேஷ் சந்திரசேகரனுக்கு வழங்கினார். கடலூர் முதுநகர் ஆற்றங்கரை வீதியை சேர்ந்த முத்து கடந்த 2011–ம் ஆண்டு சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இறந்ததற்காக வருவாய்த்துறையின் மூலம் அரசு நிவாரண உதவியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வாரிசுதாரரான சகோதரி செல்வியிடம் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.