வேப்பூர் அருகே மதுபாட்டில்கள் விற்பவர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் கிராம மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
வேப்பூர் அருகே மதுபாட்டில்கள் விற்பவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொண்டங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேப்பூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆர்ப்பாட்டம்இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை தொண்டங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள், மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய கோரி, கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.