சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி நடந்தது


சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 11:05 PM IST)
t-max-icont-min-icon

தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலம்,

சின்னசேலம் பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, சிவன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கும், வெகு தொலைவில் உள்ள விளை நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

இந்நிலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் சிவன்கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் நேற்று காலை 10.30 மணிக்கு சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த சின்னசேலம் போலீசார், பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள், தங்கள் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், அதனால் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கூறினர். அதற்கு அதிகாரிகள், கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்ற பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story