அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 50 மரங்கள் சாய்ந்து விழுந்தன
அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 50 மரங்கள் சாய்ந்து விழுந்தன. 2 வீடுகளின் மேற்கூரை பறந்தன.
அந்தியூர்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் மழையும், சில இடங்களில் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. அந்தியூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் அந்தியூரில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை இரவு 10 மணி வரை பெய்தது. இதேபோல் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல், செட்டிக்குட்டை, நல்லாமூப்பனூர், வேம்பத்தி, சிந்தகவுண்டன்பாளையம், பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
50 மரங்கள் சாய்ந்தனசூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பருவாச்சி–அந்தியூர் சாலையில் உள்ள 50–க்கும் மேற்பட்ட புளியமரம், ஆலமரம், புங்கன் மரம் வேரோடும், முறிந்தும் நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த வழியாக பஸ், கார், லாரிகளில் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களே வாகனங்களில் இருந்து இறங்கி மரங்களை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்கூரைகள் பறந்தனமேலும் சூறாவளிக்காற்றால் செட்டிகுட்டையில் உள்ள முத்துசாமி என்பவரின் வீட்டின் ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதில் வீட்டுக்குள் இருந்த அவருடைய மனைவி துளசியம்மாள் (வயது 55) படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதேபோல் அதே பகுதியில் உள்ள லட்சுமணன் என்பவரின் சிமெண்ட் மேற்கூரை சூறாவளிக்காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுதவிர அங்குள்ள 25–க்கும் மேற்பட்ட பனை மரங்களின் ஓலைகள் காற்றில் பறந்தன. இந்த மழையால் அந்தியூர் பகுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.