நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு தனியார் விற்பதாக புகார் கோபி தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு தனியார் விற்பதாக புகார் கோபி தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 18 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு தனியார் விற்பதாக புகார் கோபி தாசில்தார் அலுவலகத்தை மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் முற்றுகை

கடத்தூர்

நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு தனியார் சிலர் விற்பனை செய்வதாக கூறி கோபி தாசில்தார் அலுவலகத்தை மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். இதையடுத்து 6 ஆழ்துளை கிணறுகளை சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாட்டு வண்டிகளுடன் முற்றுகை

கோபி அருகே உள்ள தொட்டிபாளையம், பா.வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, புதுக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 200 பேர் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பகல் 11.30 மணிஅளவில் மாட்டு வண்டிகளுடன் வந்து கோபி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தாசில்தார் குமரேசன் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் விவசாயிகள் கூறுகையில், ‘கோபி அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சி பகுதியில் தனியார் சிலர் நிலத்தடி நீரை அனுமதியின்றி தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்தப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

6 ஆழ்துளை கிணறுகள் சீல் வைப்பு

இதுபற்றி ஏற்கனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர். பின்னர் தாசில்தாரிடம் விவசாயிகள் புகார் மனு ஒன்றினையும் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் கோபி வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சுமதி, அக்தர்பேகம் ஆகியோரை நேரடியாக வரவழைத்து பேசினார். இதையடுத்து அனுமதி இல்லாமல் இயக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடி சீல் வைக்க தாசில்தார் உத்தரவிட்டார். அதன்பிறகு முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து கோபி பகுதியில் உள்ள 6 ஆழ்துளை கிணறுகளை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story