கோத்தகிரியில் மக்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி ஜீப் திடலில் கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் பெரிய நிறுவனங்களுடைய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்து வருகிறது. போதிய பருவமழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. ஆகவே விவசாயிகளின் பயிர்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்லியில் தங்களது உரிமைக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் செல்வராஜ், அழகு, பூவரசன், சத்திய சிவன், தமிழ்தாசன், சதாசிவம் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.