தாய்–தந்தை கண் முன்னே முல்லைப்பெரியாற்றில் மூழ்கிய மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு


தாய்–தந்தை கண் முன்னே முல்லைப்பெரியாற்றில் மூழ்கிய மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 18 April 2017 5:30 AM IST (Updated: 18 April 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றில் குளிக்கச்சென்ற போது தாய்–தந்தை கண் முன்னே தண்ணீரில் மூழ்கிய மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

கம்பம்

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்துரு (வயது 13), நாகேந்திரன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சந்துரு அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் நாகேந்திரன் 6–ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று மதிய வேளையில் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சந்துருவும், நாகேந்திரனும் தாய்–தந்தையிடம் முல்லைப்பெரியாற்றுக்கு சென்று குளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மகன்களின் உடைகளை துவைக்க வேண்டி இருந்ததால் தாய்–தந்தையும் அதற்கு சம்மதித்தனர். அதைத்தொடர்ந்து 4 பேரும் முல்லைப்பெரியாற்றுக்கு சென்றனர்.

நீரில் மூழ்கி சாவு

பின்னர் ஆற்றின் கரைப்பகுதியில் தாயும், தந்தையும் துணிகளை துவைத்துக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் தம்பியுடன் சேர்ந்து குளித்த சந்துரு ஒரு கட்டத்தில் நீச்சல் அடித்தபடியே ஆழமான பகுதிக்கு சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அவன் மூழ்க தொடங்கினான்.

இதைப்பார்த்த கணேசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றுக்குள் குதித்து சந்துருவை மீட்டார். பின்னர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அவன் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்காமல் சந்துரு பரிதாபமாக இறந்தான். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story