டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: சிறுவர்-சிறுமிகளுடன் பெண்கள் இரவில் சாலை மறியல்


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: சிறுவர்-சிறுமிகளுடன் பெண்கள் இரவில் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

ராஜபாளையம்,

நெடுஞ்சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கி வந்த 36 கடைகளில் தற்போது 16 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அடைக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக மாற்று இடம் தேர்வு செய்யும் பணிகள் வருவாய்த் துறை மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் சத்திரப்பட்டி சாலையில் ஆர்.ஆர். நகரில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகளை ஆசிரியர் காலனி பகுதிக்கு இடம் மாற்ற வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் காலனியை சுற்றி காந்திநகர், வசந்தநகர், மாருதிநகர், பொன்னகரம் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

மறியல்

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு சிறுவர்-சிறுமிகளுடன் வந்து சத்திரப்பட்டி சாலையில் பொன்னகரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன், எதிர்ப்பு பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

Next Story