வறட்சி பாதித்த பகுதிகளில் மறுகணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், விவசாயிகள் மனு
வறட்சி பாதித்த பகுதிகளில் மறுகணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், தென்னை விவசாயிகள் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் அளித்த மனுவில், ‘‘வறட்சியால் தென்னை மரங்கள் கருகி விட்டன. வறட்சி பாதித்த பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கீடு செய்தனர். முழுமையாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே வறட்சி நிவாரணம் கிடைத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை பாதியளவே கிடைத்துள்ளது. தென்னை விவசாய பகுதிகளில் அதிகாரிகள் மறுகணக்கீடு செய்து முழுமையான நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
திருப்பூர்–தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையம் பொன்கோவில் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறோம். இரண்டு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக குடிநீர் வசதி பெற்று வந்தோம். தற்போது ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து கிடக்கிறது. வீதியில் உள்ள குழாய்களில் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இது போதுமானதாக இல்லை’’ என்று கூறியிருந்தனர்.
ஜெபவீடுமுதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மானூர் எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வரும் மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஜெபவீட்டில் அப்பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் பிரார்த்தனை செய்து வந்தோம். கடந்த 12 ஆண்டுகளாக இந்த ஜெபவீட்டை நடத்தி வருகிறோம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஜெபவீட்டில் பிரார்த்தனை செய்ய சபையை சேர்ந்தவர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர், சபையை சேர்ந்தவர்களை தாக்கினார்கள். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஊத்துக்குளி போலீஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையில் நடந்தது. அந்த அதிகாரி ஜெபவீட்டை மூடும்படி எங்களுக்கு உத்தரவிட்டார். ஜெபவீட்டை நாங்கள் மூடி விட்டோம். எனவே ஜெபவீட்டை திறந்து நாங்கள் பிரார்த்தனை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வட்டமலைக்கரை அணைதமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தினர் அளித்த மனுவில், உத்தமபாளையத்தில் உள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு திருமூர்த்தி அணை அல்லது அமராவதி அணையில் இருந்து தண்ணீர் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பல்லடம் பகுதி இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் காரணம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நால்ரோட்டில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.