குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் வந்து பெண்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் வந்து பெண்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காலி குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீர்வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கலெக்டரிடம் மனு

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கோவிலூர் வட்டம் தெற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் தலையில் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கணேஷிடம் மனு ஒன்று கொடுத்தனர் அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவிலூர் வட்டம் தெற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தெருக்குழாய்களுக்கு சரியாக குடிநீர் வருவதில்லை. இது சம்பந்தமாக பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் இதுவரை இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை தீரவில்லை.

நடவடிக்கை எடுக்க...

எனவே எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்தும், புதிய குடிநீர் குழாய் அமைத்தும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடை

இதேபோல தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் கொடுத்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மாவட்ட நிர்வாகம் மூடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த டாஸ்மாக்கடையை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பகுதியில் டாஸ்மாக்கடை திறந்தால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள், பெண்கள் மிகுந்த பாதிப்படைவர். இதனால் இந்தமுயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 

Next Story