ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.மேலும் பாடைகட்டி ஊர்வலமும் நடந்தது.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நெடுவாசல் நாடியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவது, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

6-வது நாள் போராட்டம்

இந்நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ந் தேதி அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் திடீர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டம் 6-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக் கானோர் வந்து கலந்து கொண்டனர்.

ஒப்பாரி வைத்து அழுதனர்

போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்ட உருவபொம்மையை பாடைகட்டி பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து இறுதி சடங்கு நடத்தினர்.

பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இந்த போராட்டத்தினால் நெடுவாசல் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story